மலேசிய முன்னாள் அமைச்சர் சையத் சாதிக் மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டு
கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் அமைச்சரான சையத் சாதிக் அப்துல் ரஹ்மான் மீது நீதிமன்றத்தில் நேற்று நிதிமுறைகேடு, நம்பிக்கை மோசடி குற்றங்கள் சாட்டப்பட்டன.
பெர்சத்து கட்சியின் இளையர் அணித் தலைவராக இருந்தபோது, கட்சியின் ஒரு மில்லியன் ரிங்கிட் நிதியை அவர் முறைகேடாகக் கையாண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கட்சியின் மத்திய குழுவின் அனுமதி இல்லாமல், காசோலையைப் பயன்படுத்தி கட்சி நிதியை வங்கியில் இருந்து எடுத்ததாகவும் கூறப்பட்டது.
14வது பொதுத் தேர்தல் நிதியான 120,000 ரிங்கிட் தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. 2018 ஏப்ரல் மாதத்தில் இந்த முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்டது.
2018 பொதுத் தேர்தலில்
மகாதீரின் பெர்சத்து கட்சியில் போட்டியிட்ட சையத் சாதிக், மலேசியாவின் ஆக இளவயது அமைச்சராக பொறுப்பேற்றார்.
25 வயதில் இளையர், விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட இவர், பக்கத்தான் கூட்டணியில் இருந்து பெர்சத்து விலகியதைத் தொடர்ந்து சென்ற ஆண்டு மே மாதம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
தற்போதைய பிரதமர் முகைதீன் அரசாங்கத்திலும் இணையாத சையத், சொந்தமாக மூடா என்ற அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார்.
தனது கையிருப்பில் இருந்த 250,000 ரிங்கிட் ரொக்கப் பணம் காணாமல் போய்விட்டதாக சையத் சாதிக் சென்ற ஆண்டு புகார் செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என்று ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணைகளை முடுக்கிவிட்
டது.
அந்த பணம் பெர்சத்து கட்சியின் பணம் அல்ல, அது தனக்கும் தனது பெற்றோருக்கும் சொந்தமான பணம் என்று சையத் கூறினார்.
இந்நிலையில், தன் மீதான இந்த வழக்கு பற்றி குறிப்பிட்ட அவர், "என் மீதான வழக்கு, எனக்கு அரசியல் ரீதியாகத் தரப்படும் நெருக்கடி. பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்கு ஆதரவு தர நான் மறுத்ததையடுத்து என் மீது இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
"பெரிக்கத்தானுக்கு ஆதரவு தருவதைவிட நீதிமன்ற வழக்கைச் சந்திக்க நான் தயார்," என்றார்.
பெரிக்கத்தான் நேஷனல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நிதி முறைகேடு குற்றச்சாட்டிற்கு ஆளான பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் இரண்டாவது அமைச்சர் இவர்.
முன்பு டிஏபி தலைவர் லிம் குவான் எங் மீது கடலுக்கடியில் சுரங்கப்பாதை திட்டத்தில் நிதி
முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

