பெய்ஜிங்: கொவிட்-19 கிருமித்தொற்று உருவானது குறித்த இரண்டாம் கட்ட விசாரணைக்கான உலக சுகாதார அமைப்பின் திட்டத்தை சீனா நிராகரித்துவிட்டதாக மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வூஹான் நகரில் உள்ள ஆய்வகம், சந்தைகளை ஆராய்வது உள்ளிட்ட கிருமித்தொற்று உருவான விதம் குறித்து ஆராய்வதற்கான இரண்டாம் கட்ட திட்டத்தை அமைப்பு இந்த மாதம் முன்
மொழிந்தது.
"சில கோணங்களில், பொது அறிவைப் புறக்கணித்து, அறிவியலை மீறுவது போன்ற கிருமி உருவான விதத்தைக் கண்டுபிடிக்கும் திட்டத்தை நாங்கள் ஏற்கமாட்டோம்," என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சர் டாக்டர் ஜெங் யிக்சின் செய்தியாளர்களிடம் கூறினார்.
"சீன வல்லுநர்கள் அளித்த பரிசீலனைகள், பரிந்துரைகளை உலக சுகாதார அமைப்பு தீவிரமாக மறுஆய்வு செய்யும் என்றும் கொவிட்-19 கிருமித்தொற்று உருவான விதத்தை எந்தவித அரசியல் தலையீடும் இல்லாமல், விஞ்ஞான ரீதியில் அமைப்பு அணுகும் என நாங்கள் நம்புகிறோம்," என்றும் அவர் கூறினார்.

