சிட்னி: ஆஸ்திரேலியாவில் கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர நடப்பில் உள்ள முடக்கநிலையை எதிர்த்து நேற்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலிஸ்காரர்களுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டனர்.
சிட்னியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் போலிசாரை நோக்கி போத்தல்களை வீசினர். சாலையோரங்களில் இருந்த செடிகளைப் பிடுங்கியும் வீசினர். 'சுதந்திரம், சுதந்திரம்' என்று முழக்கமிட்டபடி பிராட்வே பகுதியை நோக்கி பேரணி சென்றனர்.
சிட்னியில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் போலிஸ் அதிகாரி ஒருவர் சொன்னார்.
மக்களின் அமைதியான கூட்டத்திற்கான அங்கீகாரம் உண்டு. ஆனால் இந்த பேரணி கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு எதிரானது என்றும் நியூ சவுத் வேல்ஸ் போலிஸ்
அமைச்சர் டேவிட் எலியட் கூறினார்.
போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 3,500 பேரில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் இருந்ததை விதிமீறல் என்று கூறிய அதிகாரிகள் இதனால் அக்டோபர் மாதம் வரை கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கக்கூடிய நிலை ஏற்படும் என்று கூறினர்.
மெல்பர்னிலும் இதேபோன்று பேரணி நடைபெற்றது. பிரிஸ்பன், அடிலெய்ட் உள்ளிட்ட நகரங்களிலும் மக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மெல்பர்னில் மாநில நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடிய ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் இறங்கி போராடியதாக உள்ளூர் ஊடக செய்தி கூறுகிறது.
இதற்கிடையே, தடுப்பூசி பணியைத் துரிதப்படுத்துவதன் மூலம் கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஆஸ்திரேலியா முயன்று வருகிறது.
இந்நிலையில், கிருமிப் பரவலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சிட்னிக்கு இந்த வாரத்தில் மேலும் 50,000 தடுப்பூசிகள் கிடைக்க
உள்ளன.
ஆஸ்திரேலியாவில் இதுவரை 21 விழுக்காட்டினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த விகிதம் அமெரிக்காவில் 53%ஆகவும் பிரிட்டனில் 62%ஆகவும் உள்ளது.
நேற்று ஆஸ்திரேலியாவில் 176 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. மூன்றாவது நாளாக பதிவாகும் ஆக அதிக எண்ணிக்கைஇது.

