முடங்கியது வியட்னாம் தலைநகரம் ஹனோய்

முடங்கியது வியட்னாம் தலைநகரம் ஹனோய்

1 mins read
8b642a25-3048-438b-8777-91addc0e9ab3
-

ஹனோய்: கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வியட்னாமின் தலைநகரமான ஹனோயில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டில் கிருமிப் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய வியட்னாமில், சென்ற ஏப்ரல் மாதம் முதல் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

முதலில் முடக்கநிலை அறிவிக்கப்பட்ட ஹோ சி மின் நகரத்தில் தொற்று பரவுவது சற்று குறைந்திருந்தாலும், முடக்கநிலை உத்தரவு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வியட்னாமில் வெள்ளிக்கிழமையன்று சுமார் 7,000 பேர் தொற்றுக்கு ஆளாகினர். ஒரு வாரத்தில் பதிவான மூன்றாவது ஆக அதிக எண்ணிக்கை இது.

இவற்றில் 70 தொற்று சம்பவங்கள் ஹனோயில் பதிவானவை. அங்கு பதிவான ஆக அதிக எண்ணிக்கை இது.

இதையடுத்து எட்டு மில்லியன் மக்கட்தொகை கொண்ட ஹனோய் நகரத்தில் நேற்று முதல் கொண்டு வரப்பட்ட முடக்கநிலை அடுத்த 15 நாட்களுக்கு நடப்பில் இருக்கும்.

எனவே அங்கு கடைகள் மூடப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதோடு இருவருக்கு மேல் ஒன்றுகூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அலுவலகங்கள், அத்தியாவசிய வர்த்தகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வியட்னாமில் தடுப்பூசி போடும் பணி மந்தமாகவே உள்ளது. அங்கு இதுவரை 4.5 மில்லியன் தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன.

தாங்களே சொந்தமாக தடுப்பூசியை உருவாக்குவதாக கூறும் வியட்னாம் அடுத்த ஆண்டு முற்

பகுதியில் கூட்டு எதிர்ப்புத் திறனை எட்ட நம்பிக்கை கொண்டுள்ளது.