சிங்கப்பூர் மக்கள்தொகையில் 54 விழுக்காட்டினர் இரண்டு 'எம்ஆர்என்ஏ' கொவிட்-19 தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டனர். நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் விகிதம் ஒவ்வொரு நாளும் ஒரு விழுக்காட்டுப் புள்ளி உயர்ந்து வருகிறது.
சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இந்தப் புள்ளிவிவரங்களை நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 26) தெரிவித்தார்.
தேசிய தினவாக்கில் ஏறக்குறைய 70 விழுக்காட்டினர் இரு 'எம்ஆர்என்ஏ' தடுப்பூசிகளையும் போட்டிருப்பர் என்றும் செப்டம்பர் தொடக்கத்தில் அவ்விகிதம் 80 விழுக்காடாக உயரும் என்றும் திரு ஓங் கூறினார்.
"இதன்மூலம், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் இருக்கும். இது நம்மை கொவிட்-19 மீள்திறன் சமூகம் என்ற வலுவான நிலைக்கு உயர்த்தும்," என்றார் அமைச்சர்.
இருப்பினும், மூத்த குடிமக்கள், குறிப்பாக 70 வயதும் அதற்கும் மேற்பட்டவர்களில் பலர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பது கவலையளிப்பதாக உள்ளது என்று அவர் சொன்னார். இப்போதைக்கு, அவ்வயதுப் பிரிவினரில் 70 விழுக்காட்டிற்கு மேற்பட்டோர் இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர்.
ஆயினும், அதிகமான முதியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தடுப்பூசி மையங்களை நாடுகின்றனர் அல்லது நடமாடும் தடுப்பூசிக் குழுவினர் மூலம் தடுப்பூசி போட்டு வருகின்றனர் என்று திரு ஓங் குறிப்பிட்டார்.

