துனீசிய பிரதமர் நீக்கம்
துனிஸ்: துனீசிய அதிபர், பிரதமரை பதவி நீக்கம் செய்துள்ளார். கொவிட்-19 சூழ்நிலையை அரசாங்கம் சரிவர கையாளவில்லை என்று கூறி ஞாயிற்றுக்கிழமை அன்று
பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்முறை வெடித்தது. இதையடுத்து அதிபர் கையிஸ் சாயித் பிரதமரை பதவியிலிருந்து அகற்றியுள்ளார்.
தொற்றுக்கு 207 பேர் மரணம்
கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் கொவிட்-19 தொற்றுக்கு 207 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு முன்பு இதே மாதம் 21ஆம் தேதி 199 பேர் தொற்றுக்குப் பலியாகினர். நேற்று ஒரு நாள் மட்டும்
14,516 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அமெரிக்காவைச் சாடிய சீனா
வாஷிங்டன்: சீனாவை கற்பனையாக எதிரிபோல அமெரிக்கா நடத்துவதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. மார்ச் மாதத்திற்குப் பிறகு அமெரிக்க-சீன உயர்மட்ட சந்திப்பு நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சீன வெளியுறவு துணை அமைச்சர் ஸி ஃபெங், சீனாவுக்கு மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் பற்றி கற்றுத்தர வேண்டியதில்லை என்றார்.
கொவிட்-19 காரணமாக பெய்ஜிங்குக்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டியன்ஜின் நகரத்தில் இரு நாடுகளின் உயர்மட்ட தலைவர்கள் சந்தித்துப் பேசினர். இந்தக் கூட்டம் பதற்றமாகவே தொடங்கியது.
பிரான்சில் கட்டாயத் தடுப்பூசி
பாரிஸ்: பிரான்சில் கட்டாயத் தடுப்பூசி சான்றிதழ் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி சுகாதார மற்றும் பராமரிப்பு ஊழியர்களுக்குத் தடுப்பூசி கட்டாயமாகும். மேலும் ஆகஸ்டு மாதத்திலிருந்து உணவகங்கள் மற்றும் மதுபானக் கூடங்களில் நுழைய தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாகும்.

