கோலாலம்பூர்: மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றுக்குப் பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தொற்று மரணங்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் 207ஆக பதிவாகியிருந்தது.
கடந்த ஆண்டில் வாரம் ஒரு முறை ஒரு தொற்று மரணத்தையே கையாண்டதாகக் கூறும் இறுதிச்சடங்கு நிறுவனத்தின் முகம்மது ரஃபியூடின் ஸைனல் ரஸித், இப்போதெல்லாம் 30 மரணங்களைக் கையாள்வதாகத் தெரிவித்துள்ளார்.
தினசரி தொற்று எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் புதிதாக 17,045 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் தொற்று நெருக்கடி காலம் தொடங்கியதில் இருந்து இதுவே ஆக அதிகமான எண்ணிக்கை என்று கூறப்படுகிறது.
மலேசிய மருத்துவமனைகளில் கடந்த சில வாரங்களாக தொற்று நோயாளிகள் குவிந்தவாறு உள்ளனர்.
அங்கு கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு ஏற்றிச்செல்லும் அவசர மருத்துவ வாகனங்களின் புழக்கமும் அதிகரித்துள்ளது.
அடுத்த மூன்று மாதங்களில் இருந்து ஆறு மாதங்கள் வரை தொற்றுப் பாதிப்பால் மரணமடைவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கிள்ளாங் பள்ளத்தாக்குப் பகுதியில் மட்டும் ஒரு நாளைக்கு 120 தொற்று மரணங்களும் நாடு முழுவதும் 200ல் இருந்து 300 தொற்று மரணங்கள் பதிவாவதாகவும் திரு முகம்மது தெரிவித்தார்.
இந்நிலையில் மலேசிய சுகாதாரத்துறையின் இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா, செப்டம்பர் மாதத்தில் தினசரி தொற்று எண்ணிக்கை 24,000ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக எச்சரித்துள்ளார்.
கடந்த ஏப்ரலில் 234 தொற்று மரணங்களே பதிவாகின. அது அதற்கடுத்த மாதத்தில் ஆறு மடங்குக்கு மேல் அதிகரித்து 1,290ஆகப் பதிவாகியுள்ளது. அதுவும் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோது அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
ஜூன் மாதத்தில் முழுமையான கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்ட காலக்கட்டத்தில் 2,374 தொற்று மரணங்கள் பதிவாகின.
தொற்று மரணங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, அரசாங்கம் கோலாலம்பூரில் புதிய சவக்கிடங்கு ஒன்றை திறந்துள்ளது. ஐந்து பெரிய கொள்கலன்களால் உருவாக்கப்பட்ட அந்த சவக்கிடங்கில் ஒரே நேரத்தில் 225 உடல்களை வைக்கலாம்.
இந்நிலையில் மருத்துவமனைகள் மற்றும் சவக்கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் உடல்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. அந்தப் புகைப்படங்கள் உண்மையானவையே என்று திரு முகம்மது ரபியூடின் தெரிவித்துள்ளார்.

