கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக ஆக அதிகமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வட்டாரமாக லபுவான் கூட்டரசுப் பிரதேசம் சாதனை படைத்துள்ளது.
மலேசியாவில் 13 மாநிலங்களும் 3 கூட்டரசுப் பிரதேசங்களும் உள்ளன. அவற்றில் லபுவான் கூட்டரசுப் பிரதேசத்தில், தேசிய தடுப்பூசித் திட்டத்தில் தகுதிபெற்றவர்கள் 68,500 பேர். அவர்களில் 54,800 பேர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். இதனை அந்நாட்டு பெர்னாமா செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது.
அங்கு 80 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடுவதற்கு ஜூலை 30ஆம் தேதி இலக்காகக் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே அந்த இலக்கை எட்டிவிட்டதாக லபுவானின் தடுப்பூசிப் பணிக்குழுத் தலைவர் திரு ரித்துவான் இஸ்மாயில் கூறினார்.
இந்தத் தீவின் மக்களின் வெற்றியாக இந்தச் சாதனையைக் கருதுகிறோம். தொற்றில் இருந்து தங்களை தடுப்பூசி பாதுகாக்கும் என மக்கள் அறிந்திருப்பதும், எங்கள் குழுவினருடன் இணைந்து பாடுபட்ட தொண்டூழியர்களுமே இந்தச் சாதனைக்கு உரித்தானவர்கள் என்று புகழ்ந்தார் திரு ரித்துவான்.
ஆறு சிறிய தீவுகளைக் கொண்ட லபுவான் கூட்டரசுப் பிரதேசம் மலேசியாவின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

