சிட்னியில் முடக்கநிலை நீட்டிப்பு

சிட்னியில் முடக்கநிலை நீட்டிப்பு

2 mins read
89f75c82-3441-4366-8bd9-bb66b398d06c
-

சிட்னி: சிட்டினியைத் தலைநகராகக் கொண்ட நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் தொற்றுக்கு எதிரான முடக்கநிலையை அம்மாநிலம் மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டித்துள்ளது. ஏற்கெனவே நடப்பில் இருந்த முடக்கநிலை நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், அம்மாநில அரசாங்கம் இந்த நீட்டிப்பை அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தினசரித் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தினசரி சமூகத் தொற்றுப் பாதிப்பு 172ஐ எட்டியுள்ளது. டெல்டா வகை உருமாற்றக் கிருமியே பரவலுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில், டெல்டா வகை உருமாறிய கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருந்தும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அம்மாநிலம் திணறி வருகிறது. தற்போது எடுக்கப்பட்டுள்ள புதிய நடவடிக்கை நல்ல பலனைத் தரும் என்றும் விரைவில் தொற்று எண்ணிக்கை குறையும் என்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சிட்னிதான் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்ற ஆண்டு கொரோனா கிருமித்தொற்றின் முதல் அலை தாக்கம் தொடங்கியதில் இருந்து இங்கு தொற்றுக்கு எதிரான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதோடு கொரோனா கிருமித்தொற்றுச் சோதனைகளும் முடுக்கிவிடப்பட்டன. இருந்தும் நாளுக்கு நாள் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. முடக்கநிலையை அடுத்து பள்ளிகள், அத்தியாவசியமற்ற பணியிடங்கள், கட்டுமானங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் இரண்டு தொற்று மரணங்கள் பதிவுசெய்யப்பட்டன. 46 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 169 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.