செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
58159978-f0c1-45e7-b32d-328f76463eff
-

தென்கொரியாவில் நான்காவது அலை

சோல்: தென்கொரியாவில் கொரோனா கிருமித்தொற்றின் நான்காவது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெகுவிரைவில் பரவக்கூடியதாகக் கூறப்படும் டெல்டா என்னும் உருமாறிய கிருமியே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அங்கு புதன்கிழமை நிலவரப்படி தினசரி தொற்று எண்ணிக்கை 1,896ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் பதிவான தினசரி தொற்று எண்ணிக்கையைக் காட்டிலும் இது அதிகம். இவற்றில் சமூகத் தொற்று எண்ணிக்கை 1823. தலைநகர் சோலில் பரவி வந்த டெல்டா உருமாறிய கிருமி, இப்போது அந்நகரின் அண்டை வட்டாரங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.

தாய்லாந்தில் தடுப்பூசி போட முந்தும் மக்கள்

பேங்காக்: தாய்லாந்தில் ஒரு வாரத்திற்கு மேலாக தினசரி தொற்று எண்ணிக்கை 10,000ஐ தாண்டி பதிவாகி வருகிறது. இந்நிலையில் நேற்று மட்டும் 16,533 பேர் பாதிக்கப்பட்டனர். அதனால் தொற்றில் இருந்து தங்கள் உயிரைக் காக்க தடுப்பூசி நிலையங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். 543,661 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக பதிவான 133 தொற்று மரணங்களைச் சேர்த்து மொத்தம் 4,397 பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர்.

ஜாவாவில் தொற்று குறைந்து வருகிறது

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட ஜாவா மாநிலத்தில் கொவிட்-19 சூழல் முன்னேற்றம் கண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அங்குள்ள ஆறு மாவட்டங்களில் பாந்தென், மேற்கு ஜாவா, கிழக்கு ஜாவா, ஜோக்ஜகார்த்தா மற்றும் ஜகார்த்தா போன்ற இடங்களில் தொற்று குறைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு ஜாவாவில் அமல்படுத்தப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளே காரணம் என்கின்றனர். மத்திய ஜாவாவில்தான் நாடளவில் அதிகமான தொற்று மரணங்கள் பதிவாகின. இதுவரையிலும் அங்கு 417,147 பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர். கடந்த வாரம், பகுதிநேர முடக்கநிலையை ஆகஸ்ட் 2 வரை நீட்டிப்பதாக அதிபர் ஜோக்கோவி அறிவித்தார்.

'சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பும்

மலேசியர்களுக்கு வீட்டுத் தனிமை'

ஜோகூர்பாரு: சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பும் மலேசியர்கள், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக இருப்பின், அவர்கள் தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மலேசியாவின் ஜோகூர் மாநிலம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜோகூர்பாருவின் மாநில முதலீடு, கூட்டுறவு, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் மனிதவளக் குழுவின் தலைவர் முகமது இஸார் அகமது கூறுகையில், "தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்காக இந்த முடிவு மறுஆய்வு செய்யப்பட்டு முதலமைச்சர் ஹஸ்னி முகம்மதுவிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையை மத்திய அரசு பரிசீலனை செய்யும்," என நம்பிக்கை தெரிவித்தார்.