மலேசியாவில் கொவிட்-19 தொற்று காரணமாக நடப்புக்கு வந்த அவசரநிலை பிரகடனத்தை அகற்றுவதற்குத் தான் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று மாமன்னர் அப்துல்லா அகம்மது ஷா இன்று அறிவித்தார்.
அரசமைப்புச் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் அந்த உத்தரவை அரசாங்கம் அகற்றிவிட்டதாகவும் இது மாமன்னருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் அரண்மனை அறிக்கை தெரிவித்தது.
இப்பிரச்சினை நாடாளுமன்றத்தில் இன்று புயலைக் கிளப்பியது. கொவிட்-19 சூழல் காரணமாக நாட்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை அவசரநிலைப் பிரகடனத்தை மாமன்னர் அறிவித்து இருந்தார்.
அந்தப் பிரகடனம் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப்படாது என்று மாமன்னரும் ஆட்சியாளர்களும் அண்மையில் தெளிவுபடுத்தி இருந்தனர்.
நாடாளுமன்றத்தைக் கூட்டி அது பற்றி விவாதிக்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.
இருந்தாலும் கடந்த திங்கட்கிழமை மன்றம் கூடியபோது பிரதமர் முகைதீன் யாசின் அரசாங்கம், மாமன்னரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிர்ச்சி அடை யும் விதத்தில் ஓர் அறிவிப்பை விடுத்தது.
அந்தப் பிரகடனத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக அவசரகால பிரகடனத்தை ஜூலை 21ஆம் தேதியுடன் முடித்துக்கொள்வது என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக மன்றத்தில் பரபரப்பாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு காரணமாக நாடாளுமன்ற கீழவையில், மாமன்னர் இதற்கு இணங்கி இருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள உறுப்பினர்கள் பலரும் விரும்பினர்.
இந்நிலையில், வெளியான அரண்மனை அறிக்கை, அரசாங்கத்தின் செயல்பாட்டில் மாமன்னருக்கு இணக்கம் இல்லை என்று தெரிவித்தது. அரண்மனை அறிக்கை வெளியானதை அடுத்து இன்று மன்றத்தில் கூச்சல் கிளம்பியது.
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்த்தரப்பினர் பலத்த குரல் எழுப்பினர். பிரதமர் முகைதீன், சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் தக்யுதின் ஹாசன் இருவரும் உடனே பதவி விலக வேண்டும் என்று எதிர்த்தரப்பு தலைவர் அன்வார் இப்ராகிம் கோரிக்கை விடுத்தார். அப்போது அந்த இருவரும் மன்றத்தில் இல்லை.
இந்நிலையில், அமைச்சரவையில் உள்ள தனது அணுக்க ஆலோசகர்கள், தலைமைச் சட்ட அதிகாரி ஆகியோருடன் பிரதமர் முகைதீன் யாசின் இன்று ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவித்தன.
சூழ்நிலை பற்றி பிரதமருக்கு எடுத்துக் கூறப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரத்தை மேற்கோள் காட்டி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
பிரதமர் பதவியில் இருந்து விலகும்படி ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியினர் முகைதீனுக்கு அறிவுரை கூறி இருப்பதாகவும் தெரியவந்தது.
கீழறுப்புச் செயலில் பிரதமர் ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் உடனே பதவி விலக வேண்டும் என்றும் அம்னோ இளையர் பிரிவு வலியுறுத்தி இருக்கிறது.

