வாஷிங்டன்: உலக மக்களை தலை கீழாகப் புரட்டிப்போட்டுள்ள கொவிட்-19 கிருமி எங்கு தோன்றியது என்பது இன்னமும் மர்மமாக உள்ளது. சீனாவின் வூஹான் நகரில் முதல் முறையாக அந்தக்கிருமி அடையாளம் காணப்பட்டது. இதனால் அங்கிருந்து கிருமியின் மூலத்தைக் கண்டறியும் விசாரணையைத் தொடங்க உலக சுகாதார நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆனால் இதற்கு சீனா ஒத்துழைக்காமல் எதிர்ப்புகாட்டி வருகிறது.
இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டெட்ரோஸ் அதனாமைச் சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், கொவிட்-19 கிருமியின் தோற்றத்தைக் கண்டறியும் ஆய்வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். "கொவிட்-19 தோற்றம் பற்றிய கூடுதல் ஆய்வுகளை அமெரிக்கா ஆதரிக்கிறது. இது, தொற்று நோயை நன்கு புரிந்துகொள்ளவும் எதிர்காலத்தில் தடுக்கவும் உதவியாக இருக்கும்," என்று திரு ஆண்டனி பிளிங்கன் குறிப்பிட்டார்.
டெட்ரோசுடனான சந்திப்பு முன்கூட்டி திட்டமிடப்படவில்லை.
ஆனால் கொவிட்-19 விசாரணை தலையீடு இல்லாமல் வெளிப் படையாக சுதந்திரமாக நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்து வதற்காக அவரை திரு பிளிங்கன் சந்தித்ததாகத் தெரிகிறது.

