உலகில் உருமாறிய கொவிட்-19 டெல்டா கிருமியைத் துடைத்தொழிக்க பல நாடுகளும் முயற்சிகளை முடுக்கிவிட்டு உள்ளன. அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு புதிய ஊக்குவிப்புகளை அந்த நாட்டு அதிபர் அறிவித்து இருக்கிறார்.
இஸ்ரேல், தன் மக்களுக்கு குறிப்பாக 60 வயதைக் கடந்தவர்களுக்கு நோய்த் தடுப்பாற்றலை அதிகரிக்கும் மூன்றாவது தடுப்பூசி மருந்தை அங்கீகரித்து இருக்கிறது.
மொரோக்கோவில் இருந்து பாகிஸ்தான் வரைப்பட்ட கிழக்கு பூமி நில நடுக்கோட்டு பகுதியில் நான்காவது அலை ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்து உள்ளது. அந்த நாடுகளில் தடுப்பூசி இயக்கம் மெதுவாக இருப்பதால் கிருமி அதிகமாகப் பரவும் ஆபத்து இருப்பதாக வல்லுநர்களும் தலைவர்களும் அபாயச் சங்கு ஊதி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஏறுமுகம்
இந்நிலையில், உலகில் கொவிட்-19 தொற்றில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், இப்போதைய 2வது அலை 3வது அலையாக உருமாறும் ஆபத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் வியாழக்கிழமை 44,681 பேருக்கு புதிதாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக நேற்று அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. அவர்களில் 22,064 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அன்று 555 பேர் மாண்டுவிட்டனர்.
இந்நிலையில், பக்கத்து மாநிலங்களான கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலும் பல நாட்களாக குறைந்து வந்த தொற்று வியாழக்கிழமை திடீரென அதிகரித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடகாவில் புதன்கிழமை புதிதாக 1,531 பேருக்கு தொற்று ஏற்பட்டது. வியாழக்கிழமை இந்த எண்ணிக்கை 2,052 ஆகியது. அதேவேளையில், தமிழ்நாட்டில் ஏறத்தாழ 69 நாட்களுக்குப் பிறகு வியாழக்கிழமை புதிதாக கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை புதன்கிழமையைவிட அதிகமாக இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
புதன்கிழமை 1,756 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை வியாழக்கிழமை 1,859 ஆகியது. மகாராஷ்டிராவில் ஏழு நாட்களுக்குப் பிறகு புதிய தொற்று எண்ணிக்கை 7,000ஐ கடந்தது.
இந்தியாவில் மத்திய, மாநில அரசாங்கங்கள் கிருமியைக் கட்டுப்படுத்த தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளையும் தீவிர மாக எடுத்து வருகின்றன.

