பேங்காக்: தாய்லாந்தில்
கொவிட்-19 பாதிப்பு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
முன் இல்லாத அளவில் மேலும் 18,912 பேருக்குக்
கிருமித்தொற்று ஏற்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் தாய்லாந்தில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 597,287ஆக அதிகரித்துள்ளது.
தாய்லாந்தில் கொவிட்-19 காரணமாக நேற்று மேலும் 178 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியது. கொரோனாவால் இதுவரை அங்கு மொத்தம் 4,857 உயிர் இழப்புகள் நிகழ்ந்துள்ளன.
இதற்கிடையே, கூடுதலாக 10 மில்லியன் ஃபைசர்-பாயோஎன்டெக் கொவிட்-19 தடுப்
பூசியை தாய்லாந்து வாங்க இருப்பதாக அதன் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இவ்வாண்டின் பிற்பகுதியில் 20 மில்லியன் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியைத் தாய்லாந்து பெற இருக்கிறது.
மிகவும் வேகமாகப் பரவக்
கூடிய டெல்டா கிருமி வகையால் தாய்லாந்து கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மருத்துவமனைகளில் படுக்கைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தாய்லாந்தின் மக்கள்தொகை 66 மில்லியன். ஆனால் இதுவரை மொத்த மக்கள்தொகையில் 5.6 விழுக்காட்டினருக்கு மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தாய்லாந்துக்கு ஒரு மில்லியன் சினோவேக் தடுப்
பூசியை சீனாவும் ஒரு மில்லியன் ஆஸ்ட்ரசெனக்கா தடுப்
பூசியை ஜப்பானும் நன்கொடை வழங்கியுள்ளன. 415,000 ஆஸ்ட்ரசெனக்கா தடுப்பூசியை தாய்லாந்துக்கு அனுப்பிவைப்பதாக பிரிட்டன் உறுதி அளித்துள்ளது.
அமெரிக்கா நன்கொடை வழங்கும் 1.5 மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளில் ஒரு பகுதி நேற்று முன்தினம் தாய்லாந்தை அடைந்தது.

