புதுடெல்லி: தென்சீனக் கடற்பகுதிக்கு இந்தியா போர்க்கப்பல்களை அனுப்புகிறது. இந்தியா, தனது நட்பு நாடுகளுடனான பாதுகாப்பு உறவை விரிவுபடுத்தும் நோக்கில் சர்ச்சைக்குரிய அந்தக் கடல்பகுதிக்கு ஒரு கடற்படைக் குழுவை அனுப்பி வைப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்திய ராணுவம் சீனாவிடம் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதை இதுவரை தவிர்த்து வந்தது. ஆனால் கடந்த ஆண்டு, இந்திய-சீன எல்லைப்பகுதியில் இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து, இந்தியா, சீனா மீதான தனது போக்கை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் அமெரிக்காவுடனான தனது நட்பை மேலும் வலுவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தெற்காசியா, தென்சீனக் கடல், மேற்குப் பசிபிக் கடல் ஆகிய பகுதிகளுக்கு இந்தியா தனது கடற்படையைச் சேர்ந்த நான்கு கப்பல்களையும் ஏவுகணையை இடைமறித்து அழிக்கும் இயந்திரத்தையும் அனுப்பிவைப்பதாக இந்தியக் கடற்படை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அப்பகுதிகளில் அமைதி, ஒற்றுமையை நிலைநாட்ட நட்புநாடுகளுக்கு உதவி, அக்கடற்பகுதியில் ஒரு சீரான பாதுகாப்பு நிலையை உறுதிசெய்வதே இதன் நோக்கம் என்று இந்தியக் கடற்படை தெரிவித்தது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியப் போர்க்கப்பல்கள், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்து பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று இந்தியக் கடற்படை தெரிவித்தது.

