ஏதென்ஸ்: கிரிஸில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத் தீயால் ஏதேன்ஸின் வடக்குப்பகுதி முழுவதும் கரும்புகையில் மூழ்கிவிட்டது. இதையடுத்து மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள பர்னிதா மலையின் சரிவுகளில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிவதால் நகரமே புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.
தீயை அணைக்க 500க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக ஒன்பது ஹெலிகாப்டர்கள், ஐந்து விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
போலிசாரும் ராணுவத்தினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
"தீ இன்னமும் எரிந்துகொண்டிருக்கிறது. அதன் பரப்பளவு அகலமாக உள்ளதால் நெருங்க முடியாத அளவுக்கு வெப்பம் சுட்டெரிக்கிறது," என்று தீணைப்புப் படைஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடுமையான வெப்பம், கரும்புகையால் காற்றில் கலந்துள்ள தீங்கு விளைவிக்கும் துகள்களால் சன்னல்களை மூடி, வெளியே நடமாட்டத்தைக் குறைத்துக்கொள்ளுமாறு தேசிய கண்காணிப்பு நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
வெப்பநிலை 40 டிகிரியைத் தாண்டிவிட்டது. ஆனால் சிவில் பாதுகாப்பு அமைச்சரான நிகோஸ் ஹார்டாலியாஸ், குறைவாக வீசும் காற்று, ஈரப்பதத்தால் நிலைமை சற்று மேம்பட்டுள்ளது என்றார்.
ஒரு பகுதியில் காட்டுத் தீ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு எரிந்துகொண்டிருக்கிறது. மூன்று இடங்களில் தீ குறைந்து வருகிறது. உயிர்ச்சேதம் இல்லை.
செவ்வாய்க்கிழமை அன்று ஏதென்சின் மத்திய வட்டாரத்துக்கு வடக்கே இருபது கி. மீட்டர் தொலைவில் உள்ள வேரிம்பொம்பி நகரில் காட்டுத் தீ மூண்டது.
கடுமையான வெப்பத்தால் தீ மற்ற நகரங்களுக்கும் பரவி வீடுகள், கார்கள் எரிந்து நாசமாயின. குடியிருக்கும் வீட்டைவிட்டு மக்கள் வெளியேற வேண்டியதாயிற்று.
"கடவுளே, நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதுவரை உயிர்ச்சேதம் ஏற்படவில்லை," என்று பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட இடங்களை சீர் செய்யும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
மின்சார விநியோகம் படிப்படியாக சரி செய்யப்பட்டு வருகிறது.

