செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
de6d0a58-c8d9-4c5f-9a45-f41fb84af55d
-

மொடர்னா நிறுவன தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா அனுமதி

கான்பரா: ஆஸ்திரேலிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு மொடர்னா தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளதாக அதன் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். 25 மில்லியன் மொடர்னா தடுப்பூசி வாங்குவதற்குச் சென்ற மே மாதம் ஆஸ்திரேலிய அரசாங்கம் ஒப்பந்தம் செய்ததாகவும் அதில் ஒரு மில்லியன் தடுப்பூசி செப்டம்பர் மாதம் வந்தடையும் என்றும் அவர் சொன்னார்.

இதற்கிடையே, சிட்னியில் இருந்து கிருமித்தொற்று பரவியிருக்கக்கூடும் என்ற அச்சத்திற்கு மத்தியில், கிராமப்புறமான டேம்வொர்த்திலும் நியூ சௌத் வேல்ஸ் முடக்கநிலையை விரிவுபடுத்தியுள்ளது.

தடுப்பூசி இலக்கை அடைந்து விடுவோம்: முகைதீன் நம்பிக்கை

கோலாலம்பூர்: அக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசி போடும் இலக்கை அடைந்துவிட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மலேசிய பிரதமர் முகைதீன் யாசின். தேசிய தடுப்பூசி திட்டத்தின் செயல்பாடு குறித்தும் தடுப்பூசி போடும் பணி இதுவரை திட்டமிட்டபடி நடந்து வருவதாகவும் அக்குழுவி

னர் தன்னிடம் கூறியது தனக்கு அந்த நம்பிக்கையை அளித்துள்ளதாக அவர் சொன்னார். பிப்ரவரி 24ஆம் தேதி அத்திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, சுமார் 8,770,336 பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். வரும் 31ஆம் தேதிக்குள் 60 விழுக்காட்டு பெரியவர்களுக்குத் தடுப்பூசி போடப்படும் என்றார்.

நிரம்பி வழியும் மருத்துவமனைகள்

மணிலா: பிலிப்பீன்ஸில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. அங்கு உள்ள 1,291 மருத்துவமனைகளில்,

236 மருத்துவமனைகள் 85 விழுக்காட்டிற்கும் மேல் நிரம்பிவிட்டதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

டெல்டா வகை கிருமித்தொற்று பரவலின் காரணமாக தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அங்கு வேகமாக அதிகரித்து வருகிறது. சென்ற மாதம் நாளொன்றுக்குச் சராசரியாக 5,700 பேர் தொற்றுக்கு ஆளாகினர். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை 8,000 முதல் 10,000மாக உள்ளது. முடக்கநிலை இருந்தாலும் வரும் நாட்களில் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

'உறுப்பினர்களுக்கு லஞ்சம்'

ஈப்போ: பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு ஆதரவு வழங்குவதற்காக தனக்கு லஞ்சம் தருவதற்காக அணுகப் பட்டதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.குலசேகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக குலசேகர னின் செயலாளர் ஜெரமி சுவா ஈப்போ போலிசாரிடம் புகார் செய்துள்ளார்.

இந்த விவகாரம் ஊழல் தடுப்பு ஆணையத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக போலிஸ் தரப்பு கூறியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் தர முற்படும் வேறு சில குற்றச்சாட்டுகளை விசாரிக்க உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளது.