மலேசியா: கிருமித்தொற்று எண்ணிக்கை புதிய உச்சம்

மலேசியா: கிருமித்தொற்று எண்ணிக்கை புதிய உச்சம்

2 mins read
88e1a28e-aab9-4f60-a344-673aca35eb50
-

புத்ராஜயா: மலேசியாவில் புதிதாக 21,668 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. கொவிட்-19 கிருமிப் பரவல் தொடங்கிய பிறகு அந்நாட்டில் ஒரு நாளில் இத்தனை பேருக்குத் தொற்று ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை. மலேசியாவில் மொத்தமாகக் குறைந்தது 1,342,215 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, மலேசியாவில் பதின்ம வயதினருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடச் சொல்லி பலர் குரல் எழுப்பிவருகின்றனர். அந்நாட்டில் கிருமித்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து புதிய உச்சத்தைத் தொடும் வேளையில் அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால் இந்த நிலை உருவாகியுள்ளது. பள்ளி மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலர் இது குறித்து கவலை தெரிவித்துள்ளனர். பதின்ம வயதினருக்குத் தடுப்பூசி போடக் கோரி இணையத்தில் உருவாக்கப்பட்ட மனுவில் குறைந்தது 592 பேர் கையெழுத்திட்டனர்.

12லிருந்து 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடுவதன் தொடர்பில் மலேசிய அரசாங்கம் தொடர்ந்து மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துவந்துள்ளது. இவ்வாண்டு முக்கியத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்னுரிமை வழங்கப்படும் என்று மலேசியாவின் தடுப்பூசித் திட்டத்துக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் கடந்த ஜூன் மாதம் கூறியிருந்தார்.

சென்ற மாதம் முதல் மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி போடப்படும் என்றும் பள்ளிகள் தடுப்பூசி போடுவதற்கான நிலையங்களாக இயங்கும் என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் இதன் தொடர்பில் கூடுதல் தகவல்கள் தேவை எனச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். கூடுதல் ஆய்வுகளின் முடிவுகள் தெரியும் வரை மலேசிய அரசாங்கம் பதின்ம வயதினருக்குத் தடுப்பூசி போடாது எனத் திரு கைரி சென்ற மாதம் சொன்னார்.