பெட்டாலிங் ஜயா: அரசியல்வாதிகள் தொடர்ந்து பதவிக்கான போராட்டத்தில் ஈடுபட்டு மாநில அரசாங்கத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டால் மாநில சட்டப் பேரவை கலைக்கப்படலாம் என்று ஜோகூர் மாநிலத்தின் மன்னர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் எச்சரித்துள்ளார்.
"எனது மாநிலத்தையும் அரசாங்கத்தையும் உலுக்கக்கூடிய அரசியல் விளையாட்டுகளில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஈடுபட்டால் அதை நான் சகித்துக்கொள்ளமாட்டேன். அந்த நிலை வந்தால் சட்டப் பேரவையைக் கலைக்க நான் தயங்கமாட்டேன்," என்று அவர் எடுத்துரைத்தார்.
"தங்களைப் பற்றி மட்டுமே நினைத்துக்கொண்டு மக்களின் விருப்பங்களையும் நலனையும் கருத்தில்கொள்ளாதோர் மக்களைப் பிரதிநிதிக்கும் அரசியல்வாதிகளாக இருக்கத் தேவையில்லை," என்று அவர் குறிப்பிட்டார். ஜோகூர் மாநிலத்தின் 14வது சட்டப் பேரவை அமர்வின் தொடக்கத்தில் சுல்தான் இப்ராஹிம் இவ்வாறு சொன்னார்.
மக்களுக்கு உதவவும் ஜோகூரின் பொருளியலை மீட்சிபெற செய்யவும் கலந்துபேசி தெளிவான திட்டத்தை வரைய இந்த அமர்வை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று அவர் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார்.
"சுயநலமாக இருக்காதீர்கள். மக்கள் அவதிப்படுகிறார்கள், பசியில் தவிக்கிறார்கள், வேலைகளை இழக்கிறார்கள், கொவிட்-19 தொற்றால் சிலர் உயிருக்கும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்," என்று சுல்தான் சுட்டினார்.
சுல்தான் இப்ராஹிமின் எச்சரிக்கை அவரது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் இடம்பெற்றது.

