மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் கோத்தா சமரஹான் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 13) காலை நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் அரச மலேசிய ஆகாயப் படையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
அரச மலேசிய ஆகாயப் படை முகாமின் பாதுகாவலர் அறையில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடந்ததாக சரவாக் போலிஸ் ஆணையர் அய்டி இஸ்மாயில் கூறினார்.
"பாதுகாவலர் அறையில் பணியில் இருந்த நான்கு அரச மலேசிய ஆகாயப் படை அதிகாரிகள் இதில் சம்பந்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது," என்று தெரிவித்த அவர், இதன் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறினார்.
சம்பவ இடத்திலேயே இரு ஆடவர்கள் கொல்லப்பட்டனர். தாம் சுடப்பட்டதைத் தொடர்ந்து மூன்றாமவர் அருகிலுள்ள மருந்தகத்திற்கு வாகனத்தை ஓட்டிச் சென்றார். ஆனால், காயங்கள் காரணமாக அவர் பின்னர் உயிரிழந்தார். தமது சக பணியாளர்களைச் சுட்டுக்கொன்ற பிறகு நான்காமவர் தன்னை தானே சுட்டுக்கொண்டார்.
துப்பாக்கிச்சூடு நடந்தபோது அவர்கள் நால்வரும் பணியில் இருந்தனர். இந்தச் சம்பவத்தை உறுதிசெய்த அரச மலேசிய ஆகாயப் படை, இன்று காலை 7.15 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகக் கூறியது.
போலிசார் அவர்களது விசாரணையை முடிக்கும்வரை பொதுமக்கள் இந்தச் சம்பவம் தொடர்பில் ஊகச் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என ஆயுதப் படை கேட்டுக்கொண்டது.
"இந்தச் சம்பவத்துக்கான காரணத்தைக் கண்டறிய நாங்களும் விசாரணைக் குழு ஒன்றை அமைக்கவுள்ளோம்," என்றும் அது கூறியது.

