புத்ராஜெயா: அடுத்த மாதம்
மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் முகைதீன் யாசினுக்கு எதிராக நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.
பிரதமர் பதவியில் நீடிக்க தொடர்ந்து பல சவால்களை எதிர்நோக்கும் திரு முகைதீன், இம்முறை தமது பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிக்கு வெளியே ஆதரவு தேடப்போவதாக தெரிவித்துள்ளார். ஆளும் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் எதிர்க்கட்சியினரின் ஆதரவை திரு முகைதீன் நாடுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் தமக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்ப
தாகப் பிரதமர் முகைதீன் முடிவு எடுத்துள்ளார்.
வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் திரு முகைதீன் திடீரென்று எடுத்துள்ள இந்த முடிவு, அவருக்கு பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்பதைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
"நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவை இணங்கிஉள்ளது. எதிர்க்கட்சியின் ஆதரவு இருந்தால்தான் இந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியும்," என்று திரு
முகைதீன் தெரிவித்தார்.
தமக்குப் பெரும்பாலான நாடாளு மன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதை வேறு எந்த ஒரு நாடாளு மன்ற உறுப்பினராலும் நிரூபிக்க முடியாது என்று குறிப்பிட்ட திரு முகைதீன், பிரதமர் பதவியிலிருந்து தாம் விலகாததற்கு அதுவே
காரணம் என்று கூறினார்.
"கூட்டரசு அரமைப்புச் சட்டத்தின்படி நான் இப்போது பிரதமர் பதவியிலிருந்து விலகினால் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டிய நிலை ஏற்படும். இதன் விளைவாக பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணி அரசாங்கம் கவிழும் என்பதில் சந்தேகமில்லை என்றார் திரு முகைதீன்.
நாடாளுமன்றம் கூடும்போது பொதுத் தேர்தலில் வாக்களிப்
போருக்கான குறைந்தபட்ச வயதை 18க்குக் குறைக்க பரிந்துரை செய்யும் மசோதாவைத் தாக்கல் செய்ய இருப்பதாக திரு முகைதீன் நேற்று தெரிவித்தார். கொவிட்-19 சூழலைப் பொறுத்து, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இறுதிக்குள் பொதுத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

