ஹோ சி மின்: வியட்னாமின் ஆகப் பெரிய நகரமான ஹோ சி மின் நகரில் இம்மாத இறுதி வரை
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்படும்.
அந்நகரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர், மரணமடைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வியட்னாமில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் ஹோ சி மின் நகரைச் சேர்ந்தவர்கள்.
அந்நகரில் 4,800க்கும் மேற்பட்டோர் கிருமித்தொற்றால் மாண்டுவிட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் வரை கிருமிப் பரவலை வியட்னாம் கட்டுக்குள் வைத்திருந்தது.
ஆனால் அதற்குப் பிறகு நிலைமை கைமீறிப் போனது.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராக நீண்டகாலப் போராட்டத்துக்குத் தயாராக வேண்டும் என்று ஹோ சி மின் நகர் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் துணைச் செயலாளர் ஃபான் வான் மாய் தெரிவித்தார்.
வியட்னாமில் கொவிட்-19 தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

