செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
f6e8c16a-d10f-40c8-b932-8744c837e1ba
-

மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 16.1% அதிகரிப்பு

கோலாலம்பூர்: மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் 16.1 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தபோது அதன் பொருளியல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மலேசியாவின் பொருளியல் இவ்வாண்டு மேம்பட்டுள்ளது.

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் மலேசியாவின் பொருளியல் 7.1 விழுக்காடு வளர்ச்சி கண்டதாக அந்நாட்டின் புள்ளிவிவரத் துறை நேற்று அறிக்கை வெளியிட்டது.

மாறாக, கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மலேசியாவின் பொருளியல் 8.4 விழுக்காடு சுருங்கியது.

மலேசிய பதின்மவயதினருக்கு செப்டம்பர் மாதத்தில் தடுப்பூசி

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள பதின்மவயதினருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் திட்டம் அடுத்த மாதம் நடுப்பகுதியிலிருந்து தொடங்கும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள பதின்மவயதினருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மலேசியாவின் கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்துக்குத் தலைமை தாங்கும் அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார். அடுத்த மாதம் 1ஆம் தேதியன்று மலேசியாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் மாணவர்களுக்குத் தடுப்பூசி போட பெற்றோர் அழைப்பு விடுத்துள்ளனர். இதையடுத்து, பதின்மவயதினருக்குத் தடுப்பூசி போட மலேசிய அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.

மாணவர்களிடையே கொவிட்-19 கிருமி பரவியதை அடுத்து, மலேசியாவில் கடந்த மே மாதம் பள்ளிகள் மூடப்பட்டன.

பெரு: சினோஃபார்ம் தடுப்பூசி

50.4% பலன் தருகிறது

லிமா: சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசியை இரண்டு முறை போட்டுக்கொண்டவர்களுக்கு கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து 50.4 விழுக்காடு பாதுகாப்பு கிடைப்பதாக தென்னமெரிக்க நாடான பெருவில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவித்துள்ளது.

பெருவில் கொவிட்-19 பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, அங்குள்ள சுகாதார ஊழியர்களுக்கு சினோஃபார்ம் தடுப்பூசி போடப்பட்டது.

மியன்மாரின் முன்னாள் ராணுவத் தலைவருக்கு கொவிட்-19

நேப்பிடாவ்: மியன்மாரின் முன்னாள் ராணுவத் தலைவரான மூத்த ஜெனரல் தான் ஷ்வேவுக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மியன்மார் ஊடகம் தெரிவித்தது. சில நாட்களுக்கு முன்பு 88 வயது மூத்த ஜெனரல் தானும் அவரது மனைவியும் மியன்மார் ராணுவத்துக்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஹிரோஷிமாவில் கனமழை; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

தோக்கியோ: ஜப்பானின் ஹிரோஷிமா மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் கனமழை பெய்துவருவதால் உயர் எச்சரிக்கைநிலையை அந்நாட்டு அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

ஹிரோஷிமாவில் வெள்ளம் உட்பட மற்ற இயற்கைப் பேரிடர்களும் நிகழக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதிக்கப்படக்கூடிய இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளனர்.

பொலிவியாவில் காட்டுத் தீ; பெருமளவில் சேதம்

லா பாஸ்: தென்னமெரிக்க நாடான பொலிவியாவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ காரணமாக கிட்டத்தட்ட 150,000 ஹெக்டர் வனப்பகுதி முற்றிலும் அழிந்துவிட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். தீயை அணைக்க கடந்த வாரத்திலிருந்து தீயணைப்புப் படையினர் போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

ஜப்பானில் அடைக்கலம் நாடும்

மியன்மார் கோல்காப்பாளர்

தோக்கியோ: ஜப்பானில் நடைபெற்ற காற்பந்து ஆட்டத்தில் மியன்மார் ராணுவத்துக்கு எதிராக செய்கை காட்டிய மியன்மார் கோல்காப்பாளருக்கு அடைக்கலம் தர ஜப்பான் முடிவெடுத்துள்ளது.

கடந்த மே மாதத்தில் ஜப்பானுக்கும் மியன்மாருக்கும் இடையிலான உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டத்துக்கு முன்பு மியன்மாரின் தேசிய கீதம் ஒலிபரப்பப்பட்டபோது மாற்று கோல்காப்பாளரான பியே லியான் ஓங் தனது மூன்று விரல்களை உயர்த்தி ராணுவ ஆட்சிக்கு எதிராக தமது எதிர்ப்பைத் தெரிவித்தார். அதையடுத்து அவர் மியன்மாருக்குத் திரும்ப மறுத்துவிட்டார்.