வாஷிங்டன்: உலகளவில் சென்ற ஜூலை மாதம் ஆக அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாகவே உலக அளவில், ஆண்டின் வெப்பமான மாதம் ஜூலையாகத்தான் இருக்கும்.
ஆனால், இதுவரை பதிவான தகவல்களின்படி கடந்த ஜூலை மாதம் இதுவரை இல்லாத ஆக வெப்பமான மாதமாக பதிவானது என்றார் அதன் நிர்வாகி ரிக் ஸ்பின்ரட்.
இதற்கு முன்பு ஆக அதிக வெப்பநிலை பதிவான 2016ஆம் ஆண்டைவிட, இந்த 2021 ஜூலை மாதத்தில் நிலம் மற்றும் கடல் பரப்பின் வெப்பநிலை 0.01 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது.
20ஆம் நூற்றாண்டில் பதிவான சராசரியான 15.7 டிகிரி செல்சியஸைவிட 0.93 டிகிரி செல்சியஸ் கூடுதலாக சென்ற ஜூலை மாதம் வெப்பநிலை பதிவானதாக கூறும் அமைப்பு, இது வெப்பநிலை பதிவு செய்யப்பட்டு வரும் கடந்த 142 ஆண்டுகள் காணாத ஆக அதிக வெப்பநிலையாகும் என்றும் கூறியது.

