ஹவானா(ஹைட்டி): ஹைட்டியை உலுக்கிய நிலநடுக்கத்தில் நேற்றிரவு ஒன்பது மணி நிலவரப்படி குறைந்தது 304 பேர் மாண்டுள்ளனர். குறைந்தது 1,800 பேர் காயமுற்றனர். மேலும் பலரைக் காணவில்லை.
7.2 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சில நில அதிர்வுகளும் உணரப்பட்டன.
தேவாலயங்கள், ேஹாட்டல்கள், வீடுகள் ஆகியவை இடிந்துவிழிந்து இடிபாடுகள் மட்டுமே மிஞ்சியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைநகர் போர்ட்-அவ்-பிரின்சுக்குச் சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
கியூபா, ஜமைக்கா ஆகிய நாடுகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.
11 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் வட, லத்தீன் அமெரிக்க கண்டங்களில் உள்ள ஆக ஏழை நாடான ஹைட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியாயினர்.
இந்த நிலநடுக்கம் அதைவிட மோசமானதாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.
ஹைட்டி நேரப்படி நேற்று முன்தினம் காலை எட்டரை மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. போர்ட்-அவ்-பிரின்சில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஆனால் அங்கு சேதம் அதிகம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
ஹைட்டியின் பிரதமர் எரியல் ஹென்ரி அங்கு ஒரு மாதத்திற்கு அவசர நிலையை அறிவித்துள்ளார்.
லெஸ் காயெஸ் நகரில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் கூறினர்.
உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
மாண்ட சிலரின் உடல்கள் இடிபாடுகளிலிருந்து மீட்டெடுக்கப்பட்டதாக குடியிருப்பாளர்கள் கூறினர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஹைட்டிக்கு உடனடியாக உதவுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது நாட்டிற்கு உத்தரவிட்டார்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்புதான் ஹைட்டியின் அதிபர் ஜெவெனெல் மொய்ச கொல்லப்பட்டார்.
மேலும் அந்நாட்டின் பல பகுதிகளில் கொவிட்-19 சூழலால் பலர் பசியால் வாடுகின்றனர். போதுமான மருத்துவ வசதிகளும் அங்கு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

