டக்கேயொ(ஜப்பான்): ஜப்பானின் பல்வேறு பகுதிகள் கனத்த மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. அந்நாட்டின் மேற்குப் பகுதியில் சாலைகளும் கட்டடங்களும் வெள்ளத்தில் மூழ்கின. நேற்றிரவு ஒன்பது மணி நிலவரப்படி குறைந்தது மூவர் பலியாயினர். சிலரைக் காணவில்லை.
கியூஷு தீவு உட்பட பல பகுதிகளில் வரலாறு காணாத அளவில் மழை பொழிந்தது. இதுபோன்ற நிகழ்வை இதுவரை பார்த்ததில்லை என்று மக்களில் சிலர் கூறினர்.
நேற்றைய நிலவரப்படி கியூஷு, தோக்கியோ பகுதிகளில் மழை நின்றது. ஆனால் நாட்டின் இதர பகுதிகளில் சில தொடர்ந்து கனத்த மழையால் பாதிக்கப்பட்டன.
சகா மாநிலத்தில் உள்ள டக்கேயொ நகரில் சாலைகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கின. மீட்புப் பணியாளர்கள் படகுகளில் வெள்ளத்தில் சென்று சேதத்தை ஆராய்வதிலும் மக்களைக் காப்பாற்றுவதிலும் ஈடுபட்டனர்.

