மணிலா: பிலிப்பீன்சின் கொவிட்-19 சோதனைகள், தொடர்புத் தடமறிதல் நடவடிக்கைகள் ஆகியவற்றை மேம்படுத்தவேண்டும் என்று அந்நாட்டின் துணை அதிபர் லெனி ரொப்ரெடோ கூறியுள்ளார்.
அந்நாட்டில் அதிகமானோரிடையே கிருமி பரவிவருவதையொட்டி அவர் அவ்வாறு சொன்னார்.
"நாங்கள் எப்போதும் சோதனைகளை அதிகரிக்கும் முயற்சிகளை எடுத்துவருகிறோம், இல்லாவிடில் புதிதாகக் கிருமித்தொற்று ஏற்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும். சோதனை நடத்தப்படாததால் கிருமித்தொற்று ஏற்பட்ட பலரைப் பற்றித் தகவல் தெரியாமல் இருக்கலாம்," எனத் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்தார். சில வேளைகளில் சோதனைகள் நடத்தப்பட்டிருக்கும். ஆனால் தொடர்புத் தடமறிதல் முயற்சிகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்பட்டிருக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
பிலிப்பீன்சில் நேற்று 14,749 பேருக்குப் புதிதாக கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது. இந்த எண்ணிக்கை, கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதிக்குப் பிறகு ஒரு நாளைக்குப் பதிவானதில் ஆக அதிகமானது.
கூடுதலானோர் கிருமித்தொற்றுக்கு ஆளாவதைத் தொடர்ந்து சோதனைகள் இன்னும் மலிவாக இருக்கவேண்டும் எனத் திருமதி ரொப்ரெடோ வலியுறுத்தினார்.
பிரச்சினையைக் கையாள தொடர்பு தடமறிதல் நடவடிக்கைகளை மேம்படுத்தவேண்டும் என்றும் அவர் சுட்டினார்.

