போலந்திடம் தடுப்பூசிகள் வாங்கிய ஆஸ்திரேலியா
சிட்னி: ஆஸ்திரேலியா, போலந்திடமிருந்து ஒரு மில்லியன் ஃபைசர் தடுப்பூசிகளை வாங்கியுள்ளது.
புதிய தடுப்பூசிகள் உடனடியாக ஆஸ்திரேலியா வந்து சேரும் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறினார்.
அவற்றில் பாதிக்கும் மேலானவை நியூ சவுத் வேல்ஸில் 20லிருந்து 39 வயதுக்கு உட்பட்டோருக்குப் போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை போதுமானோருக்குத் தடுப்பூசி போடப்படாததால் திரு மோரிசன் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளார். 16 வயதைத் தாண்டிய ஆஸ்திரேலியர்களில் இதுவரை சுமார் 24 விழுக்காட்டினருக்கு மட்டுேம இரண்டு முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சிறுவர்களிடையே கொவிட்-19
வாஷிங்டன்: அமெரிக்காவில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட கொவிட்-19 தொற்று ஏற்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவில் பதிவாகியுள்ளது.
வேகமாகப் பரவக்கூடிய டெல்டா வகை கொவிட்-19 கிருமிப் பரவல் அதற்குக் காரணம்.
அங்கு குறைந்தது 1,900 சிறுவர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் மேலும் நோயாளிகளைச் சேர்ப்பதற்குப் போதுமான இடம் இல்லாமல் போனது.
தற்போது அந்நாட்டில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொவிட்-19 நோயாளிகளில் 2.4 விழுக்காட்டினர் சிறுவர்கள்.
12 வயதுக்குக் கீழ் உள்ள சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடமுடியாது. அமெரிக்காவில் தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 129,000 பேருக்குப் புதிதாக கொவிட்-19 தொற்று ஏற்படுகிறது.
தென்கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சி
சோல்: தென்கொரியாவும் அமெரிக்காவும் இன்று முதல் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்தும். அரசதந்திர, பாதுகாப்பு ரீதியாக வடகொரியா விடுத்துவரும் எச்சரிக்கைகளுக்கு நடுவே இந்தக் கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெறுகிறது.
தென்கொரியாவும் அமெரிக்காவும் பல ஆண்டுகளாகக் கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்திவருகின்றன. அவற்றைப் போருக்கான ஆயத்த நடவடிக்கைகள் என்று வடகொரியா கண்டித்து வந்துள்ளது.
தென்கொரியா தொடர்ந்து பயிற்சிகளை நடத்துவதைப் பிறர் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் கேள்விக்குரியாக்கும் செயலாக வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் தங்கை கிம் யோ ஜொங் சாடினார்.
தனது நாட்டுடனான உறவை மேம்படுத்துவதற்குப் பதிலாக சோலும் வாஷிங்டனும் அதை மோசமாக்கிவருவதாகச் சொன்ன மூத்த வடகொரிய அதிகாரி ஒருவர், இதனால் பெரிய பாதுகாப்பு நெருக்கடி வரக்கூடும் அபாயம் உள்ளது என்றார்.

