ஜூரோங் மின்பிடித் துறைமுகத்தில் கடந்த மாதம் கொவிட்-19 தொற்றுக் குழுமம் உருவெடுத்ததைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதால், சிங்கப்பூரில் தடுப்பூசித் திட்டத்தைத் துரிதப்படுத்த நேரம் கிடைத்தது.
அந்த நடவடிக்கையால் தொற்று காரணமாக கூடுதலானோர் மரணமடைவதைத் தவிர்க்க முடிந்ததாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் இன்று (ஆகஸ்ட் 19) தெரிவித்துள்ளார்.
"இரண்டாம் கட்ட (உயர்த்தப்பட்ட விழிப்புநிலை) நடைமுறைக்குத் திரும்ப எடுக்கப்பட்ட முடிவு சரியானதே. நல்ல வேளையாக நாங்கள் அவ்வாறு செய்தோம். இல்லையெனில், கூடுதலான மரணங்கள் ஏற்பட்டிருக்கும்," என்று திரு ஓங் விவரித்தார்.
ஜூலை 29க்கும் இம்மாதம் 18க்கும் இடையே எட்டு கொவிட்-19 மரணங்கள் பதிவாகின. அவர்களில் எழுவர் தடுப்பூசி போட்டிராத மூத்தோர் என அமைச்சர் சுட்டினார்.
"நல்ல செய்தி என்னவென்றால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதும் மேலும் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதும் அதற்குக் காரணம்," என்று இன்று நடைபெற்ற மெய்நிகர் செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

