கோலாலம்பூர்: மலேசியாவில் புதிதாக 22,948 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை ஒரு நாளைக்கு இவ்வளவு பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது இதுவே முதல் முறை.
கடந்த திங்கட்கிழமையன்று மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் பதவி விலகினார். தற்போது அவர் இடைக்காலப் பிரதமராக இருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் தமக்கு இருந்த அறுதிப் பெரும்பான்மை ஆதரவை அவர் இழந்தார்.
திரு முகைதீனின் அரசாங்கம் கிருமிப் பரவலைச் சரியாகக் கட்டுப்படுத்தவில்லை எனப் பல தரப்பினர் அவரை சாடியுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக மலேசியாவில் புதிதாகத் தொற்று ஏற்பட்டோர், அதனால் மாண்டோர் ஆகியோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது.
மலேசியாவில் இதுவரை மொத்தமாக சுமார் 1,489,460 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
அதன் மாநிலங்களில் சிலாங்கூரில்தான் ஆக அதிகமானோருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சாபா, கெடா ஆகிய மாநிலங்கள் அதிகமாகப் பதிக்கப்பட்டுள்ளன.

