'தென்னாப்பிரிக்காவில் 80%
மக்களுக்கு கொவிட்-19 இருக்கலாம்'
ஜொகானஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் 80 விழுக்காட்டினருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று ஆப்பிரிக்க கண்டத்தின் ஆகப் பெரிய சுகாதாரக் காப்புறுதி நிறுவனமான 'டிஸ்கவரி ஹெல்த்' தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து கிருமிப் பரவலால் உலகில் ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றாகத் தென்னாப்பிரிக்கா இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அந்நாட்டில் குறைந்தது 2.6 மில்லியன் பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. சுமார் 78,377 பேர் மாண்டுவிட்டனர்.
ஏற்கெனவே கிருமித்தொற்று ஏற்பட்டு குணமடைந்தோருக்கும் டெல்டா வகை கிருமித்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டுப்பாடுகளைப் பற்றி ஆலோசிக்கும் தென்கொரியா
சோல்: தென்கொரியாவில் அதிகமானோரிடையே கொவிட்-19 கிருமி பரவிவரும் நிலையில் அங்கு கட்டுப்பாடுகளை முடுக்கிவிடுவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
கிருமிப் பரவலை நன்கு கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்றாகத் தென்கொரியா கருதப்படுகிறது. இருந்தாலும் அங்கு அண்மைக் காலமாக புதிதாகத் தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை அவ்வப்போது அதிகரித்து வந்துள்ளது.
அந்நாட்டில் இதுவரை சுமார் 230,808 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. சுமார் 2,191 பேர் மாண்டுள்ளனர்.
விடுமுறையைக் கழிக்க பலர் உள்ளூரில் பயணம் செய்துவருவதால் கிருமி அதிகமாகப் பரவுவதாகச் சொல்லப்படுகிறது.

