காபூல்: நேட்டோ படைகளுக்கும் முன்னாள் ஆப்கன் அரசாங்கத்துக்கும் பணியாற்றியவர்களை தலிபான் போராளிகள் வீடு வீடாகச் சென்று தேடுவதாகவும் அவர்
களின் குடும்பத்தினரை மிரட்டு
வதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.
பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லை என்று நாட்டைக் கைப்பற்றிய பிறகு தலிபான் அமைப்பு தெரிவித்தது.
ஆனால் தலிபான் அமைப்பு சொல்வது ஒன்று, செய்வது ஒன்று எனக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஜெர்மன் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவரின் உறவினரை தலிபான்
போராளிகள் துப்பாக்கியால்
சுட்டுக் கொன்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னோர் உறவினர் படுகாயம் அடைந்தார். ஆப்கானிஸ்தானின் சிறுபான்மையினத்தவர்களான ஹசாரா இன ஆடவர்கள் பலரை, தலிபான் போராளிகள் சித்திரவதை செய்து கொன்றதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் சுதந்திர தினத்தைக் கொண்டாடவும் தலிபானுக்கு எதிர்ப்பைக் காட்டவும் ஆப்கான் கொடியுடன் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் வீதிகளில் திரண்டனர்.
அவர்களை நோக்கி தலிபான் போராளிகள் துப்பாக்கியால் சுட்டதாகவும் அதில் சிலர் மாண்டதாகவும் தெரிவிதக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விமான நிலையத்தில் திரண்டுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றும் பணிகளை விரைவுபடுத்தப்போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, ஆப்கானிஸ்தானுக்குச் சொந்தமான நிதியை அமெரிக்கா முடக்கி
இருப்பதால் ஏற்கெனவே பல சிரமங்களை எதிர்கொள்ளும் ஆப்கன் பொருளியல் முடங்கிவிடும் அபாயம் இருப்பதாக பொருளியல் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதில் ஆப்கன் மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் காரணமாகவும் வறட்சி காரணமாகவும் ஆப்கானிஸ்தானில் மூன்றில் ஒருவர் பட்டினியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐநாவின் உலக உணவுத் திட்டப் பிரிவு கவலை தெரிவித்துள்ளது.

