மலேசியாவின் முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின், நாட்டின் வரலாற்றிலேயே ஆகக் குறைவான காலகட்டத்திற்கு பிரதமர் பதவியில் நீடித்தார். இருந்தபோதும், எதிர்காலத்தில் மீண்டும் அதிகாரத்திற்குத் திரும்புவதில் தாம் நம்பிக்கையுடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அரசாங்க ஊழியர்களிடம் கடந்த திங்கட்கிழமை திரு முகைதீன் ஆற்றிய உரையில் இதனைத் தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமிப்பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் நடமாட்டக் கட்டுப்பாடு நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள பொருளியல் நெருக்கடியையும் சமாளித்து ஒன்றோடு ஒன்று சமநிலைப்படுத்த தமது நிர்வாகம் இயன்றவரை முயற்சி செய்ததாக அவர் கூறினார்.
பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பு இந்த உரையை ஆற்றிய திரு முகைதீன், "உயர்ந்து செல்லும் ஒன்று இறுதியில் கீழே வரும். ஆனாலும் இப்போது கீழே இறங்கினாலும் இறைவனின் அருளால் நான் திரும்ப வருவேன்," என்று கூறினார்.
மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷா, திரு இஸ்மயில் சப்ரி யாக்கோப்பை புதிய பிரதமராக அறிவித்ததை அடுத்து, திரு முகைதீனினை உரையைக் கொண்டுள்ள ஒளிப்பதிவு நேற்று (ஆகஸ்ட் 20) மாலை அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற பெரும்பான்மையை இழந்ததை அடுத்து திரு முகைதீன் பதவி விலகும் கட்டாயத்திற்கு ஆளானார். அவர் கொவிட்-19 கிருமிப்பரவலைக் கையாண்ட விதம் குறித்து கூட்டணிக் கட்சியான அம்னோவை சேர்ந்த சிலர் அவருக்கான ஆதரவை மீட்டுக்கொண்டனர். மலேசியாவில் இதுவரை 1.5 மில்லியனுக்கு அதிகமானோர் கொவிட்-19 பாதிக்கப்பட்டனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை 13,000 ஆக உள்ளது.

