கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய பிரதமராக இஸ்மாயில் சப்ரி அதிகாரபூர்வமாகப் பதவியேற்றுள்ளார். அம்னோ கட்சியின் துணைத் தலைவரான திரு இஸ்மாயில் மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராவார்.
ஆளும் கட்சியாக இருந்த அம்னோ 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தோல்வியுற்றது. சுதந்திரமடைந்த பிறகு முதன்முறையாக அம்னோ தேர்தலில் தோல்வியுற்றது.
இப்போது அந்த நிகழ்வுக்கு மூன்றே ஆண்டுகளுக்குப் பிறகு அக்கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
கொவிட்-19 நெருக்கடியிலிருந்து மலேசியா மீளும் வரை திரு இஸ்மாயில், அறுதிப் பெரும்பான்மை ஆதரவுடன் 'பெரிக்கத்தான் நேஷனல்' கூட்டணி ஆட்சியை வழிநடத்துவார். தற்போது அவருக்கு 220 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 114 பேரின் ஆதரவு உள்ளது.
சென்ற ஆண்டு தொடக்கத்தில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
அதனைத் தொடர்ந்து மலேசியாஅரசியல் நிலைத்தன்மையை இழந்தது.
'பெரிக்கத்தான் நேஷனல்' கூட்டணியின் திரு முகைதீன் யாசின் சென்ற ஆண்டு மார்ச் மாதம் பிரதமராகப் பதவியேற்றார். சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் தனக்கு இருந்த அறுதிப் பெரும்பான்மை ஆதரவை அவர் இழந்தார். அதற்குப் பிறகு அவர் ஐந்து நாட்களுக்குத் தற்காலிகப் பிரதமராகப் பதவி வகித்தார். அதன் பின்னர் நேற்று திரு இஸ்மாயில் பிரதமராகப் பதவியேற்றார்.
மலேசிய வரலாற்றில் ஆகக் குறுகிய காலத்திற்குப் பிரதமராகப் பதவி வகித்த திரு முகைதீன், தான் ஆட்சி செய்த விதத்தைத் தற்காத்துப் பேசியுள்ளா்.
கொவிட்-19 சூழல், முடக்கநிலையால் பொருளியலுக்கு வரும் பாதிப்பு இரண்டையும் தம்மால் முடிந்தவரை நன்கு கையாண்டதாகத் திரு முகைதீன் அரசாங்க ஊழியர்களுக்கு அளித்த நன்றி உரையில் குறிப்பிட்டார்.
வருங்காலத்தில் மீண்டும் பிரதமராகும் நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் சொன்னார்.
கொவிட்-19 கிருமிப் பரவல் பிரச்சினையைத் திரு முகைதீன் சரியாகக் கையாளவில்லை எனக் குறைகூறப்பட்டது. அதுதான் அவர் அறுதிப் பெரும்பான்மை ஆதரவை இழக்கக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

