மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன் நகரங்களில் முடக்கநிலைக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களுடன் மோதிய காவல்துறையினரில் காயமுற்ற குறைந்தது ஏழு பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
விக்டோரியா மாநிலத்தின் தலைநகர் மெல்பர்னில் குறைந்தது 218 பேர் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிட்னி தலைநகராக விளங்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் குறைந்தது 47 ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. பொதுச் சுகாதார உத்தரவுகளை மீறியது, கைதாவதைத் தவிர்த்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன.
ஆஸ்திரேலியாவில் ஒரு நாளைக்கு இதுவரை இல்லாத அளவில் ஆக அதிகமானோருக்குப் புதிதாக கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அந்நாட்டில் 894 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் சிட்னி நகரில் உள்ளவர்கள்.

