ஷாங்ஹாய்: மோசமடையும் கிருமிப் பரவல்
ஷாங்ஹாய்: சீனாவின் ஷாங்ஹாய் நகரில் கொவிட்-19 கிருமிப் பரவல் மோசமடைந்துவருகிறது. அதனால் அங்கு அதிகாரிகள் நூற்றுக்கணக்கானோரைத் தனிமைப்படுத்தியுள்ளனர்.
அந்நகரின் விமான நிலையம் ஒன்றின் ஊழியர்கள் சிலருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சுமார் 120 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களையும் தாண்டி ஓரளவு தொடர்பிலிருந்த மேலும் நூற்றுக்கணக்கானோரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஜியாங்சு, ஹுபெய் மாநிலங்களிலும் சிலருக்குப் புதிதாகக் கிருமித்தொற்று ஏற்பட்டது.
சீனாவில் இதுவரை குறைந்தது 94,599 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. குறைந்தது 4,636 பேர் அதற்குப் பலியாகியுள்ளனர்.
தடுப்பூசி போடாவிட்டால் பணிநீக்கம்
டொரொன்டோ: தான் நடத்தும் மருத்துவமனைகளில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரைப் பணிநீக்கம் செய்யப்போவதாக கனடாவின் சுகாதார அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.
வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோருக்கு இந்த நிலை ஏற்படும் என்று டொரொன்டோ நகரில் பல மருத்துவமனைகளை நிர்வகிக்கும் 'யுனிவர்சிட்டி ஹெல்த் நெட்வர்க்' எனப்படும் சுகாதார அமைப்பு தெரிவித்தது.
டொரொன்டோ பொது மருத்துவமனை உட்பட டொரொன்டோவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு இந்த நிபந்தனை பொருந்தும்.
கடந்த சில வாரங்களில், ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை பல கனடிய நிறுவனங்கள் கட்டாயமாக்கியுள்ளன.
வீட்டிலிருந்து வெளிவரத் தடை: பொருட்களை வாங்க அவசரம்
ஹோ சி மின் நகரம்: வியட்நாமின் பொருளியல் மையமான ஹோ சி மின் நகரில் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளிவரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களை அவசரமாக வாங்க மக்கள் திரண்டனர்.
அந்நகரில் இதுவரை இல்லாத அளவில் கொவிட்-19 கிருமி பரவி வருவதையொட்டி இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
பொதுமக்கள் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்யும் பணியை ராணுவ வீரர்களும் காவல்துறையினரும் மேற்கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டது.

