காபுல்: ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியிலுள்ள பக்லான் மாநிலத்தின் புல்-இ-ஹெசார் பகுதி தலிபான் பிடியிலிருந்து நழுவியுள்ளதாகச் சில தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் தலிபானிடமிருந்து அந்தப் பகுதியைக் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது.
டெ சலா, கசான் ஆகிய பகுதிகளையும் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகச் சில குடியிருப்பாளர்கள் கூறினர்.
தலிபானைச் சேர்ந்த 40 பேரைத் தாங்கள் கொன்றுவிட்டதாகவும் குறைந்தது 15 பேரைக் காயமுறச் செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, தனது செயல்களுக்குத் தாங்கள்தான் பொறுப்பு என்று தலிபான் கூறியுள்ளது.
தனது உறுப்பினர்கள் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் தவறான செயல்கள் குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக அது தெரிவித்தது.
வரும் வாரங்களில் ஆப்கானிஸ்தானை ஆள புதிய அரசாங்கக் கட்டமைப்பை வரையத் திட்டமிட்டுள்ளதாக அது சொன்னது.
மேலும், நேற்று முன்தினம் தலிபானின் அதிகாரபூர்வ இணையத்தளங்கள் காணாமற்போயின. இதற்குத் தொழில்நுட்பக் கோளாறா அல்லது வேரேதும் காரணம் இருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. தலிபான் பல மொழிகளில் இணையத்தளங்களை இயக்கிவருகிறது.

