ஆஸ்திரேலியாவில் அன்றாட கிருமித்தொற்று புதிய உச்சம்

ஆஸ்திரேலியாவில் அன்றாட கிருமித்தொற்று புதிய உச்சம்

1 mins read
55c921f4-2933-459b-a0d1-59434e1a7369
-

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் தற்காத்து பேசியுள்ள அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன், குறைந்தது 70 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரை கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும் என்று கூறினார்.

ஆஸ்திரேலியாவில் நேற்று ஆக அதிக எண்ணிக்கையாக 914 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. முந்திய நாள் இந்த எண்ணிக்கை 894ஆக இருந்தது.

ஆறாவது வார முடக்கநிலையில் இருக்கும் விக்டோரியாவில் நேற்று 65 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்தாலும் நியூ சௌத் வேல்ஸில் நேற்று 830 பேர் தொற்றுக்கு ஆளாகினர்.

ஓரிரு மாதங்களாக நீடிக்கும் கட்டுப்பாடுகள் ஆஸ்திரேலிய மக்களின் பொறுமையை சோதித்துவிட்டது. கொவிட்-19 கட்டுப்பாடுகளை எதிர்த்து சிட்னி, மெல்பர்னில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலிசார் கைது செய்தனர்.

இந்நிலையில் "எப்போதுமே கட்டுப்பாடுகளுடன் வாழ முடியாது. ஒரு கட்டத்தில் மாற்றம் வேண்டுமானால், 70% தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும்," என்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் மோரிசன் சொன்னார்.

அங்கு இதுவரை வெறும் 30% முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அஸ்ட்ரா ஸெனிகா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்குவதும் ஃபைசர் தடுப்பூசி கிடைக்காததும் பெரும் பாலானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததற்கு காரணமாகக் கூறப்படுகிறது.