சிங்கப்பூரில் கொவிட்-19 காரணமாக மொத்தம் 50 பேர் மாண்டுவிட்டனர். அவர்களில் 13 பேர் இந்த மாதத்தில் மட்டும் மரணமடைந்துள்ளனர்.
அந்த மரணங்களில் பெரும்பாலானவை, இந்த மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக நிகழ்ந்தவை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
இம்மாதத் தொடக்கத்தில் அன்றாட தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்தது என்று அமைச்சர் விளக்கினார்.
இந்த மாதத்தில் மரணமடைந்த 12 பேரில் 11 பேர் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்பதை ஃபேஸ்புக்கில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 23) அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், கொவிட்-19 தொற்று காரணமாக 86 வயது மாது ஒருவர் மாண்டுவிட்டதாக சுகாதார அமைச்சு திங்கட்கிழமை தெரிவித்தது. இவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. கொவிட்-19 தொற்று காரணமாக இந்த மாதம் மரணமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள்.
அவர்களில் பலரும் எற்கெனவே பல நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். இதைப் பார்க்கும்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகத் தெரிகிறது என்றார் அமைச்சர்.
தங்களுக்கு நோய்கள் இருப்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பயமாக இருக்கிறது என்று பலரும் கவலை அடைகிறார்கள் என்று தெரிவித்த அமைச்சர், இவர்களில் பலருக்கும் தடுப்பூசி மிகவும் முக்கியமானதாக இருக்கிறது என்றார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றால் கொவிட்-19 கிருமி தொற்றும் பட்சத்தில் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதே இதற்கான காரணம் என்றார் திரு ஓங்.