ஹனோய்: தென்கிழக்கு ஆசிய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று வியட்னாமுக்குச் சென்ற அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ், சீனாவைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சீனாவுக்கு வட்டார நாடுகளும் அழுத்தம் தர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தென்சீனக் கடலின் சில பகுதி களை சீனா, வியட்னாம், புருணை, மலேசியா, பிலிப்பீன்ஸ், தைவான் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.
சீனா, அந்தக் கடலில் பெரும் பகுதி தனக்குச் சொந்தம் என்று கூறி வருகிறது.
உலக நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய வழித் தடமாக இருக்கும் தென் சீனக் கடலை சில குறிப்பிட்ட நாடுகள் சொந்தம் கொண்டாடுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
வியட்னாமின் அதிபரைச் சந்திப்பதற்கு முன்பு பேசிய கமலா ஹாரிஸ், "ஐநா கடல் சட்டத்தை மதித்து நடக்கவும் அதிகப்படியான கடல் பகுதிகளை உரிமை கொண்டாடுவதற்கு எதிராகவும் சீனாவுக்கு நெருக்குதலை அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், வியட்னாமுடன் உறவை மேம்படுத்திக் கொள்ள விரும்புவதாகவும் அவர் சொன்னார். திருமதி ஹாரிஸ் 2வது நாளாக நேற்று சீனாவைத் தாக்கிப் பேசினார்.
முன்னதாக சிங்கப்பூரிலும் அவர் சீனாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து சீனாவின் அதி காரபூர்வ ஊடகம், கமலா ஹாரிசை சாடியிருந்தது.
சீனாவையும் தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் பிளவு படுத்த கமலா ஹாரிஸ் முயற்சி செய்வதாக அந்த ஊடகம் கூறியிருந்தது.

