ஷா ஆலம்: உலக நாடுகள் கொவிட்-19 கிருமிக்கு எதிராக இரண்டு முறை தடுப்பூசி போடு வதில் தீவிரம் காட்டி வரும் வேளையில் மலேசியாவின் சிலாங்கூர் மாநிலம் கூடுதலாக 3வது முறை பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு ஆயத்தமாகிறது.
செல்வாக்ஸ் எனும் சிலாங்கூர் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று நேற்று அம்மாநில சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.
பதினெட்டு வயதுக்குக் கீழ் உள்ளவர்களையும் உள்ளடக்கி ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் கொவிட்-19 தடுப்பூசி விநியோக உத்தரவாத சிறப்புக் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளது என்று சட்டசபையில் பேசிய சுகாதார, ஒற்றுமை, மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுக் குழுவின் தலைவரான டாக்டர் சிட்டி மரியா மஹ்முட் தெரிவித்தார். சட்டசபையில் உறுப்பினர் ஒருவரது கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
இம்மாதம் 22ஆம் தேதி வரை செல்வாக்ஸ் சமூகத் திட்டத்தின் கீழ் 224,880 தடுப்பூசிகள் போடப்பட்டதாகவும் 275,120 தடுப்பூசிகள் எஞ்சியிருப்பதாகவும் டாக்டர் சிட்டி மரியா ேமலும் தெரிவித்தார்.

