தைப்பே: தைவானில் மே 9ஆம் தேதிக்குப் பிறகு நேற்று முதல் முறையாக தொற்றுச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது.
தொற்று அறவே இல்லாத அல்லது குறைவாக உள்ள நாடாக பெயர் பெற்ற தைவானில் மே மாதம் மத்தியில் கிருமிப் பரவல் அதிகரித்தது. இதையடுத்து அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை அமலாக்கியது. உணவகங்களில் உண்ணவும் ஒன்றுகூடவும் அது தடை விதித்தது.
இவற்றுடன் தடுப்பூசி போடுவதும் தீவிரமாக்கப்பட்டதால் கிருமித் தொற்று கட்டுக்குள் வந்தது.
இதன் காரணமாக முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடந்த மாதம் தளர்த்தப்பட்டன.
அதே சமயத்தில் நாட்டுக்குள் நுழைபவர்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் வலுப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் உள்ளூரில் புதிய தொற்றுச் சம்பவங்கள் ஏற்படாததால் சுகாதார அமைச்சர் சென் ஷிஹ-சுங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஆனால் நோய்க்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் கைவிடக் கூடாது என்று அவர் கேட்டுக்கொண்டார்.
"வருகின்ற இரு வாரமும் கண்காணிப்புக் காலமாகும். எல்லாரும் பாதுகாப்பாக இருப்பது அவசியம்," என்று அவர் வலியுறுத்தினார்.
தைவானில் கொள்ளைநோய் பரவத் தொடங்கியதிலிருந்து இது வரை மொத்தம் 15,939 பேர் பாதிக் கப்பட்டனர். 830 பேர் அந்நோயால் உயிரிழந்தனர்.
நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக தைவான் கிருமிப்பரவலை வெற்றி கரமாக கட்டுப்படுத்தியுள்ளது.

