சிட்னி: ஆஸ்திரேலியாவில் கிருமித் தொற்றுச் சம்பவங்கள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன. நேற்று ஒரு நாள் மட்டும் புதிதாக ஆயிரம் பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிட்னி நகரில் கொவிட்-19லிருந்து உருமாறிய டெல்டா கிருமி கட்டுக்கடங்காமல் பரவி வரும் வேளையில் புதிய தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
மக்கள் அதிகம் வசிக்கும் சிட்னி நகரை உள்ளடக்கிய நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மட்டும் முந்தைய 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,029 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகிஉள்ளன. மூவர் மாண்டுவிட்டனர்.
கடந்த ஜூன் மாதம் மத்தியில் சிட்னியில் கிருமிப் பரவல் தலை தூக்கியது. அதன் பிறகு நேற்று வரை மொத்தம் 15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிட்னியிலிருந்து மற்ற நகரங்களுக்கும் தொற்று பரவியதால் நாடு முடக்கத்திற்குத் திரும்பியது. ஆஸ்திரேலியாவின் மக்கள் நெரிசல்மிக்க தென்கிழக்கு வட்டாரத்தில் பயணத் தடைகள் விதிக்கப்பட்டன.
தொற்றுச் சம்பவங்கள் தொடர்ந்து கூடி வருவதால் மருத்துமனை களுக்கு நெருக்கடி ஏற் பட்டுள்ளது. இதற்கிடையே செப்டம்பர் மத்தியில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் மிதமான அளவுக்குத் தளர்த்தப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்வர் கிளாடிஸ் பெரஜிக்லியான் அறிவித்துள்ளார்.
தொற்று அதிகமில்லாத பகுதிகளில் தடுப்பூசி போட்ட ஐவர் ஒன்றுகூட அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் எட்டு மில்லியன் மக்களுக்கு ஆறு மில்லியன் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
"இது ஒன்றுதான் வாய்ப்பு. நமது சமூகத்தின் நலனுக்கும் மனநலத்துக்கும் இதுவே சிறந்த வழி," என்று பெரஜிக்லியான் குறிப்பிட்டார். சுகாதாரத் துறை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் கிருமித்தொற்றைச் சமாளிக்க முடியும் என்று கூறிய அவர், உதவி தேவைப்படுவோர் அனைவருக்கும் உதவி கிடைக்கும் என்று உறுதி அளித்துள்ளார்.

