மலேசியா: சுகாதார அமைச்சராக கைரி நியமிப்பு

மலேசியா: சுகாதார அமைச்சராக கைரி நியமிப்பு

2 mins read
44585cfa-aceb-48a4-a1cc-b519e75205f0
-

கோலாலம்பூர்: மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராக அண்மையில் பொறுப்பேற்ற இஸ்மாயில் சப்ரி யாக்கோப், இன்று காலை தமது அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டார்.முன்னாள் பிரதமர் முகைதீன் யாசினைப் போலவே, திரு இஸ்மாயிலின் முதல் அமைச்சரவைப் பட்டியலிலும் துணைப் பிரதமராக எவரும் அறிவிக்கப்படவில்லை.

திரு இஸ்மாயிலின் அம்னோ கட்சியைச் சேர்ந்தவர்களே அமைச்சரவைப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மூத்த அமைச்சர்கள் நால்வர் உட்பட 31 அமைச்சர்களும் 38 துணை அமைச்சர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சர் அஸ்மின் அலி. தொழிலக அமைச்சர் ஃபதில்லா யூசோஃப், கல்வி அமைச்சர் ரட்ஸி ஜிதின், தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசேன் ஆகிய மூத்த அமைச்சர்கள் தங்களது பதவிகளைத் தக்கவைத்துக்கொண்டுள்ளனர்.

கடந்த ஆட்சியில் அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சராகச் செயல்பட்ட கைரி ஜமாலுதீன், புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சராக இருந்த டாக்டர் ஆதம் பாபா, புதிய அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார். புதிய அமைச்சரவையில் இந்தியர் இருவர் இடம்பெற்றுள்ளனர். மலேசிய இந்தியர் காங்கிரஸ் துணைத் தலைவர் எம் சரவணன், மனிதவள அமைச்சராகத் தொடரவுள்ளார். பெர்சத்து கட்சியைச் சேர்ந்த எட்மண்ட் சந்தாரா, சுற்றுலா, கலை, பண்பாட்டுத் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையில் ஒன்பது பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

"கொவிட்-19 பரவலுக்கு எதிராக ஒன்றிணைந்து எழவும், அப்பெருந்தொற்று காரணமாக இன்னல்களில் இருந்து மலேசியக் குடும்பங்களை மீட்கவும் நாட்டிற்கு இந்த அமைச்சரவை புதிய நம்பிக்கையை அளிக்கும் என்று நம்புகிறேன்," என்று திரு இஸ்மாயில் கூறினார். ஒவ்வோர் அமைச்சும் பொறுப்பேற்ற நூறு நாள்களுக்குள் தங்களது சாதனைகளை மெய்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.