கோலாலம்பூர்: நாடு மற்றும் மக்களின் நலனுக்காகத் தங்களால் முடிந்ததைச் செய்யப்போவதாக மலேசியாவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்.
வர்த்தக, தொழில் மூத்த அமைச்சரான அஸ்மின் அலி, திரு இஸ்மாயில் சப்ரி யாக்கோபைப் பிரதமராக்கியதற்கு மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷாவிற்குத் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
தனக்கு அமைச்சர் பதவி தந்ததற்குப் பிரதமர் இஸ்மாயில் சப்ரிக்கும் அவர் நன்றி சொன்னார்.
நீண்டகாலம் நிலைத்திருக்கும் வகையில் மீண்டுவந்து பொருளியலைச் சிறப்பான முறையில் வளர வைக்கத் தாம் கடமைப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
கொவிட்-19 தடுப்பூசியை மக்களுக்கு ஆக வேகமாகப் போடும் உலக நாடுகளில் ஒன்றாக மலேசியா உள்ளது என்று சொன்ன அவர், அது தொடரவேண்டும் எனக் குறிப்பிட்டார்.
பொருளியல் மற்றும் மக்கள் நலனுக்காகத் தாமும் தமது அமைச்சும் முடிந்ததைச் செய்யப்போவதாக மீண்டும் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் திரு ஸாஃப்ருல் தெங்கு அஸிஸ் கூறினார்.
இவர்களைப் போல் இதர அமைச்சர்களும் தங்களின் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.
இதற்கிடையே, பிரதமராகப் பதவியேற்ற பிறகு திரு இஸ்மாயில் சப்ரி முதன்முறையாகத் தமது தொகுதியான பெராவிற்குச் சென்று மக்களைச் சந்தித்தார்.
அதற்கு முன் அவர் தமது பெற்றோரின் கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

