கோலாலம்பூர்: ஜோகூர் அனைத்துலக முனையம் வழியே மலேசியா செல்வதற்கு ஏழு நாட்களுக்கு முன், தங்கள் வீட்டிலோ வேறொருவரின் வீட்டிலோ தனிமைப்படுத்திக்கொள்ள கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள பயணிகள் விண்ணப்பிக்கவேண்டும். பெர்னாமா செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
மேலும், மலேசியாவிற்குப் புறப்படுவதற்குக் குறைந்தது மூன்று நாட்களுக்கு முன் பயணிகள் 'ஆர்டி-பிசிஆர்' கொவிட்-19 சோதனையை மேற்கொள்ளவேண்டும் என்று மலேசியாவின் சுகாதாரத்துக்கான தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
பயணிகளிடமிருந்து கிருமி பரவுவதற்கான சாத்தியம், அவர்களின் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதற்கான விண்ணப்பத்தைப் பொறுத்து கணிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
மலேசியாவில் தங்க தகுந்த இடம் இருக்கவேண்டும், கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்படாததை 'ஆர்டி-பிசிஆர்' சோதனை உறுதிப்படுத்தவேண்டும். இத்தகைய நிபந்தனைகளைப் பயணிகள் பூர்த்திசெய்யவேண்டும்.
மேலும், ஜோகூர் வழி மலேசியாவிற்குப் பயணம் மேற்கொள்ள, ஆஸ்ட்ராசெனெக்கா, ஃபைசர், சினோவேக், மொடர்னா, சினோஃபார்ம் ஆகிய தடுப்பூசிகளை இரண்டாவது முறை போட்டுக்கொண்டு குறைந்தது 14 நாட்கள் ஆகியிருக்கவேண்டும். ஜான்சன் & ஜான்சன், கேன்சினோ போன்ற ஒரு முறை செலுத்தவேண்டிய தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டால் குறைந்தது 28 நாட்கள் ஆகியிருக்கவேண்டும் எனத் திரு நூர் ஹிஷாம் குறிப்பிட்டார்.
இந்த நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யாத மலேசியர்களும் வெளிநாட்டுப் பயணிகளும், சொந்த செலவில் அரசாங்கம் நிர்ணயிக்கும் நிலையங்களில் தனிமைப்படுத்தப்படுவர்.
அனைத்துலக முனையத்திற்கு வந்து சேர்ந்தவுடன் அனைத்து பயணிகளுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும்.
அதோடு, ஆர்டி-பிசிஆர்' சோதனை மறுபடியும் மேற்கொள்ளப்படும்.

