நியூ ஒர்லீன்ஸ்: அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் ஐடா புயல் வீசவிருப்பதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
மணிக்கு 209 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய ஐடா புயல், 150 ஆண்டுகளில் அம்மாநிலம் காணாத மோசமான புயலாக இருக்கக்கூடும் என்று அதன் ஆளுநர் ஜான் பெல் எட்வர்ட்ஸ் எச்சரித்தார்.
ஐடா மிகவும் மோசமான, அபாயகரமான புயலாக உருவெடுக்கிறது என்றும் உதவி வழங்க மத்திய அரசாங்கம் தயாராய் உள்ளது என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.
நேற்றிலிருந்து சரியாக 16 ஆண்டுகளுக்கு முன் லூசியானாவின் ஆகப் பெரிய நகரான நியூ ஒர்லீன்ஸை கத்ரினா புயல் தாக்கியது. அதனால் நகரின் 80 விழுக்காட்டுப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது, 1,800க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அதில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு இம்முறை நிலைமையை நன்கு கையாளமுடியும் என்ற நம்பிக்கை லூசியானாவில் உள்ளது.

