கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான புதிய அமைச்சரவையின் உறுப்பினர்கள் மலேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷா முன்னர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.
தேசிய அரண்மனையில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் புதிய அமைச்சர்கள் குழுக்களாக பதவியேற்றனர்.
முதல் குழுவில் அனைத்துலக வர்த்தக, தொழில்துறை அமைச்சர் முகமது அஸ்மின் அலி, தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுதின் ஹுசைன், நிதி அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஸீஸ், பொதுப் பணித்துறை அமைச்சர் ஃபாடில்லா யூசோஃப், கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிதின், போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங், மனிதவள அமைச்சர் எம்.சரவணன் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததைத் தொடர்ந்து ஆகஸ்ட் 20ஆம் தேதி இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகு சென்ற வெள்ளிக்கிழமை தனது புதிய அமைச்சரவை பற்றிய விவரங்களை அவர் வெளியிட்டதைத் தொடர்ந்து நேற்று அமைச்சர்கள் பதவியேற்றனர்.
ஆனால் இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் இஸ்மாயில் கலந்துகொள்ளவில்லை.
கொவிட்-19 தொற்று உள்ள ஒருவருடன் பிரதமர் இஸ்மாயில் தொடர்பில் இருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக அறிக்கை தெரிவித்தது.
ஆனால் பிரதமர் எத்தனை நாள் தனிமைப்படுத்தப்படுவார், தொற்றுக்கு ஆளாகியிருந்தவர் யார் என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
பேராக், திரெங்கானு, ஜோகூர், கெடா, கிளாந்தன், சாபா ஆகிய மாநிலங்களில் செப்டம்பர் மாத இறுதிக்குள் 50 விழுக்காட்டு பெரியவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு
உள்ளதாக இஸ்மாயில் சொன்னார்.

