வெலிங்டன்: நியூசிலாந்தில் நேற்று 53 பேர் டெல்டா வகை கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளானதைத் தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 562ஆக ஆனது.
இவர்களில் ஆக்லாந்தில் மட்டும் 547 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெலிங்டனில் 15 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.
42 பேரைத் தவிர மற்றவர்கள் முந்தைய தொற்றுச் சம்பவங்களோடு தொடர்புப்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்ற வாரத்தில் அண்மைய தொற்றுச் சம்பவம் முதலில் கண்டறியப்பட்டவுடன் நியூசிலாந்தில் கொண்டு வரப்பட்ட நாடு தழுவிய முடக்கநிலை இன்று நள்ளிரவு வரை நடப்பில் இருக்கும்.
அதன் பிறகு ஆக்லாந்தைத் தவிர மற்ற இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபைசர் தடுப்பூசி போட்டுக்
கொண்டவர் மரணம்
இதற்கிடையே, ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவர் மாண்டுவிட்டதாக நியூசிலாந்து தெரிவித்துள்ளது. இது அங்கு நேர்ந்துள்ள முதல் மரணம்.
ஃபைசர் தடுப்பூசியால் அரிதாக ஏற்படக்கூடிய பக்கவிளைவாக கருதப்படும் 'மையோகர்டிஸ்' எனும் ரத்த ஓட்டத்தை மெதுவடைய செய்யும் இதய அழற்சி காரணமாக பெண் ஒருவர் மாண்டுவிட்டதாக நியூசிலாந்தின் கொவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவின் அறிக்கை கூறுகிறது.

