செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
b927d150-e5f6-40a8-8dd6-286a64ef6f81
-

வடகொரியாவில் மீண்டும் அணு உலை

யோங்பயோங்: வடகொரியா தனது யோங்பயோங் அணு உலையை மீண்டும் தொடங்கியுள்ளதாக ஐநா அணு உலை கண்காணிப்புக் குழு தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அணு ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும் புளூட்டோனியம் இந்த அணு உலை வளாகத்தில் உற்பத்தி செய்யப்படுவதாக நம்பப்படுகிறது. அணு உலை இயங்கு வதைக் குறிக்கும் வகையில், ஜூலை மாதத்திலிருந்து அணு உலை யில் குளிர்ச்சியான நீர் வெளியேற்றப்படுவதாக கண்காணிப்புக் குழு கூறியது. 5 மெகாவாட் உலை கொண்ட அணுசக்தி வளாகமான யோங்பயோங், வடகொரியாவின் அணுவாயுதத் திட்டத்தின் முக்கியமான ஒன்றாகும்.

லூசியானாவை இருளில் மூழ்கடித்த 'ஐடா'

நியூ ஆர்லின்ஸ்: வட அமெரிக்காவின் லூசியானாவில் 'ஐடா' சூறாவளி தாக்கியதில் 750,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சார இணைப்பு தடைப்பட்டுள்ளதால், அமெரிக்காவின் நியூ ஆர்லின்ஸ் நகரம் இருளில் மூழ்கியுள்ளது. சென்ற வார இறுதியில் மெக்சிக்கோ வளைகுடாவில் உருவான ஐடா சூறாவளி அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் கரையைக் கடந்தது.

உயிர்சேதத்தைத் தடுக்கும் பொருட்டு பாதிக்கப்படக்கூடிய பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நியூ ஆர்லின்ஸ் மாநிலத்தில் 2005ஆம் ஆண்டு கத்ரினா சூறாவளி தாக்கியபொழுது சுமார் 1,800 பேர் உயிரிழந்தனர். கத்ரினாவைவிட வலுவான புயலாக ஐடா இருக்கும் என்றும் 150 ஆண்டுகளில் வீசாத புயலாக அது இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

மாசடைந்த மொடர்னா தடுப்பூசி

தோக்கியோ: ஜப்பானில் தோக்கியோவிற்கு அருகில் உள்ள குன்மா மாநிலத்தில் அமெரிக்க நிறுவனமான மொடர்னா கொவிட்-19 தடுப்பூசி மாசடைந்து இருந்தது கண்டறியப்பட்டது. ஒரு சிறிய, கறுப்புப் பொருள் ஒன்று மொடர்னா தடுப்பூசி குப்பியில் இருந்ததையடுத்து, அந்த குறிப் பிட்ட தொகுதியில் உள்ள தடுப்பூசிகள் போடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் சொன்னார்.

இதற்கிடையே, மொடர்னா தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் மாண்டுவிட்டதாகவும் அவர்களுக்கு மாசு இருந்த தடுப்பூசி போடப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.